Friday, November 25, 2011

ஆட்சிக்காலம் ஐந்து வருடம் முடிந்தால் மரணம்ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
  
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.
 
 இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
 
 இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
 
 மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''  தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது ! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
 
 கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
 
 மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
 
 மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
 
 படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
 
 ''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
 
 ''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
 
 ''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''
 
 ''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
 
 ''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம்
வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
 
 இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
 
 மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு,வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
 
 நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
 
 இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப்
போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு !'' என்றான் மன்னன்.
 
 ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
 
 மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?
 
 பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.
 
 ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
 
 இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
 
 அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!!!!!!!
 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Minmalar said...

நல்ல கதை
நல்ல மெசேஜ்

dinesh said...

உண்மையிலேயே நல்ல கதை

யூர்கன் க்ருகியர் said...

சூப்பர்

NAAI-NAKKS said...

Good story...

suryajeeva said...

இதை தானே நம் அரசியல் வாதிகளும் செய்கிறார்கள்... என்ன இவர்கள் காட்டுக்கு போவதில்லை... அடுத்தவரை ஆள விட்டு அடுத்த ஐந்தாண்டு காத்திருக்கிறார்கள்

NIZAMUDEEN said...

சமயோசிதம் கொண்ட மன்னன்.

Arun J Prakash said...

நல்ல அருமையான கதை.
சம கலக்கல்.

Mohamed Faaique said...

என் அப்பா எனக்கு சொன்ன கதை. இங்க பார்த்ததும் ரொம்ப டச்சிங்க் ஆயிடுச்சு...

ரா.செழியன். said...

கேள்விப்படாத கதை,நல்லாயிருக்கு.

தமிழ்கிழம் said...

மன்னிக்கவும் தோழா...
பலமுறை படித்த கதை தான்....

இராஜராஜேஸ்வரி said...

வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!!!!!!!

இராஜராஜேஸ்வரி said...

நம் அரசியல்வாதிகளும் சிறைக்குத்தான் பலவச்திகள் ஏற்படுத்திக் கொள்கின்றனர்..

ஆட்சிமுடிந்து காட்சிகள் மாறியவுடன் அரசியல்வாதிகள் செல்லப்போது அங்கேதானே!

பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் சீரமைத்து அங்கேயா செல்லப்போகிறார்கள்???

Gnanam Sekar said...

அருமையான தன முனைப்பு கதை . நன்றி

vivekanandan paramanantham said...

???? ???????? ???. ???? ??????? ??????? ???.